செய்திகள்

மாணவர்கள் பாசப் போராட்டம் நடத்திய பள்ளியில் கல்வி அதிகாரி ஆய்வு

Published On 2018-06-22 15:03 IST   |   Update On 2018-06-22 15:03:00 IST
ஆசிரியர் பகவான் இடமாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம் நடத்திய பள்ளியில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
பள்ளிப்பட்டு:

பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் பகவான்.

5 ஆண்டுகள் பணியாற்றிய அவருக்கு திருத்தணி அருகே உள்ள அருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

ஆசிரியர் மீது பாசம் கொண்ட மாணவ-மாணவிகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி கதவை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ஆசிரியர் பகவான் பணி விடுப்பு உததரவு பெறுவதற்காக நேற்று முன்தினம் வெளிய கரம் பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை பிரிய மனமில்லாத மாணவ-மாணவிகள் அவரை தடுத்து நிறுத்தி பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என்று கதறி அழுதனர்.

சில மாணவர்கள் அவரை கட்டி அணைத்து கெஞ்சினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்து பலர் நெகிழ்ந்தனர்.

இதையடுத்து ஆசிரியர் பகவான் இதே பள்ளியில் 10 நாட்களுக்கு தொடர்ந்து பணி செய்ய பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் வெளிய கரம் பள்ளிக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் அருச்செல்வம் மற்றும் அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்ய வந்தனர்.

அவர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News