செய்திகள்

ரோடு, தெருக்களில் நிறுத்தப்பட்ட 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

Published On 2018-06-21 07:15 GMT   |   Update On 2018-06-21 07:15 GMT
சென்னையில் கேட்பாரற்று ரோடு, தெருக்களில் நிறுத்தப்பட்ட 5 ஆயிரம் வாகனங்களை மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது. அடுத்த வாரம் இந்த வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.
சென்னை:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரோடுகள் தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கேட்பாரற்று நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.

சென்னை போக்குவரத்து போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சென்னை சாலைகளில், தெருக்களில் நிறுத்தப்பட்ட 5,300 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

வடக்கு சென்னை பகுதியில் 1-5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம், மெட்டல் டிரேடிங் கார்ப்பரே‌ஷன் இணைந்து பறிமுதல் செய்த வாகனங்களை அடுத்தவாரம் ஏலம்விடுகிறது. முதல்கட்டமாக 300 வாகனங்களை ஏலம் விட திட்டமிட்டுள்ளது.

இதில் 120 வாகனங்களை ஏலம் விட போலீஸ் துறையில் இருந்து தடையில்லா சான்று (என்.ஓ.சி.) வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலை, தெருக்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்ற நிலையில் பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு மற்றும் சுகாதார கேடு, கொசுத்தொல்லைகள் ஏற்படுகின்றன.

மாநகராட்சி சார்பில் தற்போது 5,300 கேட்பாரற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 நாட்களுக்குள் வாகனங்களின் உரிமையாளர்கள் வந்து உரிய சான்றுகளுடன் வாகனங்களை பெறாததால் அடுத்த வாரம் இந்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

முதல்கட்டமாக 300 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. மெட்டல் கிராப் டிரேடிங் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. வட சென்னை பகுதிகளில் சாலை, தெருக்களில் கேட்பாரற்ற அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News