செய்திகள்
கிணற்றில் விழுந்த யானைகள் மீண்டும் வெளியே வந்த காட்சி.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் தோட்டத்து கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு

Published On 2018-06-20 06:23 GMT   |   Update On 2018-06-20 06:23 GMT
சத்தியமங்கலம் வனப்பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த 3 யானைகள் பொக்லைன் எந்திரம் மூலம் வனத்துறையினர் மீட்டனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி கடம்பூர் அருகே உள்ள கானக்குந்தூரில் அந்த பகுதியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் 3 யானைகள் காட்டை விட்டு வெளியேறி வழி தவறி தோட்டத்துக்குள் புகுந்தது.

அந்த தோட்டத்தில் 70 அடி ஆழம் கொண்ட ஒரு கிணறு இருந்தது. அந்த வழியாக வந்த 3 யானைகளும் தவறி ஒன்றன் பின் ஒன்றாக அந்த கிணற்றில் விழுந்தது.

கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் அந்த 3 யானைகளும் தண்ணீரில் நீந்தியப்படி தத்தளித்து பலமாக பிளிறியது.

யானைகளின் பிளிறல் சத்தத்தை கேட்டு ஊர் பொது மக்கள் அங்கு ஓடி வந்தனர். கிணற்றுக்குள் 3 யானைகள் விழுந்ததை கண்டு திடுக்கிட்ட மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சத்தியமங்கலம் ரேஞ்சர் பெர்னார்டு தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரத்தால் யானைகள் அந்த வழியாக வரும் படி குழி தோண்டப்பட்டது.

இதன் வழியாக 3 யானைகளும் கிணற்றில் இருந்து வெளியேறியது. பிறகு அந்த 3 யானைகளையும் சத்தம் போட்டப்படி காட்டுக்குள் விட்டனர்.

கிணற்றில் இருந்து மீண்டு வந்த 3 யானைகளும் மகிழ்ச்சியுடன் பிளிறியபடி காட்டுக்குள் சென்றது. #Tamilnews
Tags:    

Similar News