செய்திகள்

மீண்டும் நீட்தேர்வு எழுதி வெற்றி பெற்று டாக்டர் ஆவேன்: தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி அஷ்டலட்சுமி பேட்டி

Published On 2018-06-09 15:55 IST   |   Update On 2018-06-09 15:55:00 IST
கண்டமங்கலம் அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி அஷ்ட லட்சுமி, மீண்டும் நீட்தேர்வு எழுதி வெற்றி பெற்று டாக்டர் ஆக உள்ளதாக கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

கண்டமங்கலம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்துள்ளது சேஷாங்கனூர் காலனி. இந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ராதாகிருஷ்ணன்- பழனியம்மாள் ஆகியோரின் 3-வது மகள் அஷ்டலட்சுமி (வயது 17). இவர் கண்டமங்கலம் வள்ளலார் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2வில் அறிவியல் பாடம் எடுத்து படித்து தேர்வு எழுதி 738 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார்.

நீட்தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி அஷ்டலட்சுமி சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் தற்கொலை முயற்சி செய்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி அஷ்டலட்சுமி மாலைமலர் நிருபருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது பெற்றோர்கள் ஆசைப்படியும் எனது விருப்பப்படியும் நான் சிறுவயதிலிருந்தே படித்து டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசையில் கண்டமங்கலம் வள்ளலார் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தேன்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 448 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றேன். தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்து பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி 738 மதிப்பெண்பெற்று வெற்றி பெற்றேன்.

எப்படியும் டாக்டர் ஆகிவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் கும்மிடிப் பூண்டியில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்றேன். பின்னர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட சென்னை குரோம்பேட்டை தேர்வு மையத்தில் தேர்வு எழுதினேன்.

சமீபத்தில் நீட் தேர்வு முடிவு வந்தது அதில் நான் தோல்வி அடைந்தேன் இதனால் எனது டாக்டர் கனவு பலிக்கவில்லையே என்ற மனவேதனையுடன் இருந்தேன். மேலும் எனக்கு அவமானமாக இருந்தது. இந்த நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் நான் எப்படியும் டாக்டர் படிப்பில் சேர்ந்திருப்பேன் என்று புலம்பி கொண்டிருந்த எனக்கு எனது அப்பா-அம்மா, அண்ணன் அக்கா ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். எனது மனம் அவர்களது சமாதானத்தை ஏற்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை செத்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். எனது பெற்றோர்கள் என்னை காப்பாற்றி விட்டார்கள்.

என்னை போன்ற ஏழை மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். எனது பெற்றோர்கள் ஆசைப்படியும் எனது விருப்பப்படியும் மீண்டும் நீட்தேர்வு எழுதி வெற்றிபெற்று டாக்டர் ஆவேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

இவ்வாறு அஷ்டலட்சுமி கண்ணீருடன் கூறினார்.

Tags:    

Similar News