செய்திகள்

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருடுபோன அமைச்சர் செல்லூர் ராஜு செல்போன் மீட்பு

Published On 2018-06-04 08:18 GMT   |   Update On 2018-06-04 08:18 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருடுபோன கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் செல்போனை போலீசார் மீட்டுள்ளனர்.
போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி திறப்பு விழா கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடந்தது.

இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அமைச்சர் புறப்பட்டபோது அவரது செல்போன் காணாமல் போனது தெரியவந்தது.

இது தொடர்பாக அமைச்சர், போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், திருவண்ணாமலை மாவட்ட மற்றும் போளூர் சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஜமுனாமரத்தூர் அடுத்த கோமூட்டேரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் (27) என்பவரிடம் இருந்து அமைச்சரின் செல்போனை போலீசார் மீட்டனர். பின்னர் அதனை அமைச்சரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வெங்கடேசன் போலீசில் கூறியதாவது:- ஜமுனாமரத்தூர் சுற்றுலா ஏரிக்கரை அருகே செல்போன் கிடந்தது. அப்போது போனில் சிம்கார்டு எதுவும் இல்லை. எனவே, அதனை வீட்டிலேயே கொஞ்ச நாள் வைத்திருந்தேன். பின்னர் அதனை திருப்பூரில் பணிபுரியும் எனது தம்பியிடம் கொடுத்து விட்டேன் என கூறியுள்ளார்.

வெங்கடேசனின் தம்பி செல்போனில் சிம் கார்டு போட்டவுடன் சைபர் கிரைம் போலீசில் சிக்கி கொண்டார். இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் தங்கியிருந்த அறைக்குள் வெங்கடேசனோ அவரது தம்பியோ செல்லவில்லை. அமைச்சருடன் இருந்தவர்கள் யாரோ செல்போனை திருடியுள்ளனர்.

பின்னர், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் செல்போனில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்ததுடன் சிம்கார்டினை எடுத்து விட்டு ஏரிக்கரையில் செல்போனை வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். #TNMinister #SellurRaju
Tags:    

Similar News