செய்திகள்

தூத்துக்குடி கலவரம் - ரஜினிகாந்த் கருத்துக்கு இல.கணேசன் ஆதரவு

Published On 2018-06-01 04:03 GMT   |   Update On 2018-06-01 04:03 GMT
தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து சரியானது தான் என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் கூறினார். #ilaganesan #rajinikanth #thoothukudiprotest
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து சரியானது தான். போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.

அவர்களை தூண்டி விட்ட சதிகாரர்கள் யார் என கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தூத்துக்குடி சம்பவத்தால் 3 விதமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



உ.பி. மற்றும் பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததால் கட்சிக்கு பின்னடைவு இல்லை. தோல்விக்கான சரியான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்வோம்.

கர்நாடகத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால் காங்கிரஸ் கட்சி சதி செய்து ஆட்சி அமைக்க விடாமல் செய்து விட்டது.

தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம் பாளையத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் குளம் தூர் வாரப்பட்டதாக கூறி பணம் மோசடி நடைபெற்று உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் அரசு தான் கொண்டு வந்தது.

இத்திட்டத்தில் யாரும் சரியாக வேலை செய்வதில்லை. இத்திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஆதார் கார்டு மூலம் தான் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. அவ்வாறு இருந்தும் முறைகேடு நடைபெறுகிறது. இனி இவ்வாறு நடைபெறாமல் நல்ல வழி ஏற்படுத்தப்படும்.

எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. அவர்கள் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது. வீட்டையும், நாட்டையும் தாங்கும் தூண் போல் செயல்பட வேண்டும்.

முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பெற்றோர்கள் பயத்தில் இருப்பார்கள். இப்போது இளைஞர்கள் வெளியே சென்றால் பெற்றோர் பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட தலைவர் உத்திரகுமார், செயலாளர் சுப்பு, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். #ilaganesan #rajinikanth #thoothukudiprotest
Tags:    

Similar News