செய்திகள்
தீக்குளிக்க முயன்ற ஜெயக்குமார் அவரது மனைவி சுகுணாவை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்-மனைவி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

Published On 2018-05-28 11:40 GMT   |   Update On 2018-05-28 11:40 GMT
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
கோவை:

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(47). டிரைவர். இவரது மனைவி சுகுணா(39). இவர்கள் 2 பேரும் இன்று காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தாங்கள் பாட்டிலில் மறைத்து கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைப்பார்த்த அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ஓடிச்சென்று அவர்களை மீட்டனர். பின்னர் அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த தண்ணீரை அவர்கள் மீது ஊற்றினர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு ஜெயக்குமாரிடம் தற்கொலைக்கு முயன்றது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது,

டீக்கடையில் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னிடம் தான் கலெக்டர் அலுவலகத்தில் வேலைபார்ப்பதாகவும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி என்னிடம் பணம் கேட்டார். நான் ரூ.70 ஆயிரம் கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட அவர் வேறு யாராவது இருந்தாலும் சொல்லுங்கள். அவர்களுக்கும் வீடு வாங்கி தருகிறேன் என்றார்.

இதையடுத்து நான் எனக்கு தெரிந்தவர்களிடம் ரூ.12 லட்சம் வரை வசூல் செய்து அந்த நபரிடம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் உங்கள் அனைவருக்கும் விரைவில் வீடு கிடைக்கும் என்று கூறினார். இதற்கிடையே நீண்ட நாட்கள் ஆனதும் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் வீடு கேட்டு வந்தனர். இதையடுத்து நான் அந்த நபரை தேடி டீக்கடைக்கு சென்றேன். அப்போது அவர் அங்கு வருவதை நிறுத்திக்கொண்டார்.

அவர் பெயர் விவரம் எதுவும் தெரியாததால் அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து என்னிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். அந்த மோசடி நபர் குறித்து உக்கடம் போலீசில் நான் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றோம் என்றார்.

தொடர்ந்து அந்த மோசடி நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News