செய்திகள்

பலியானவர்கள் உடல்களை வாங்க மறுப்பு - தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகை

Published On 2018-05-23 05:45 GMT   |   Update On 2018-05-23 05:45 GMT
ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest
தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலியான 10 பேரின் உடல்களும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.



அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். ஏற்கனவே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் அறிவித்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை மூட எழுத்து பூர்வமாக அரசு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்”என்றனர். தொடர்ந்து அரசை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  #SterliteProtest

Tags:    

Similar News