செய்திகள்

தமிழகத்தில் சுயாட்சி உரிமை பறிக்கப்பட்டுள்ளது- எ.வ.வேலு பேச்சு

Published On 2018-05-18 10:24 GMT   |   Update On 2018-05-18 10:24 GMT
தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதன்மூலம் மாநிலத்தின் சுயாட்சி பறிக்கப்பட்டுள்ளது என்று எ.வ. வேலு பேசியுள்ளார்.

காரியாபட்டி:

திருச்சுழியில் தி.மு.க. இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுத்தம்பி தலைமை தாங்கினார். நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் போஸ், கண்ணன், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி வரவேற்றார்.

திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கம்தென்னரசு, அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர்.

முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினர். அவர் பேசியதாவது:-

தமிழகத்திற்கு இப்போது சுதந்திரம் இல்லை. தமிழகத்தை மத்திய அரசு கையில் வைத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகிறது.

தமிழக அரசு சுயமாக செயல்படவில்லை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் ரூ. 45 ஆயிரம் கடன் உள்ளது. அவ்வளவு தொகையை தமிழக அரசு கடன் பெற்றுளது. தமிழ்நாடு வளர்ந்தா உள்ளது? இல்லை. கடனில் தான் உள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவேன் என்று கூறினார். ஆனால் அறிக்கை வெளியிட்டதோடு சரி. இதுவரை எந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவில்லை.

தமிழகத்தில் 85 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனம் ஜப்பானில் இருந்து வந்து காத்துக் கிடந்தது. ஆனால் ஜப்பான் நாட்டு நிறுவனத்திற்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. அந்த நிறுவனம் தற்போது ஆந்திராவிற்கு சென்று விட்டது.

தமிழை பழமையான மொழி என்று பேசிய பிரதமர் மோடி அவரது கட்டுப்பாட்டில் உள்ள விமானத்துறைகளில் உள்ள விமானங்களில் ஏன் தமிழ் பேசுவது இல்லை.

தமிழகத்தில் சுயாட்சி பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதன்மூலம் மாநிலத்தின் சுயாட்சி பறிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் எங்கு சென்று ஆய்வு நடத்துகிறாரோ அங்கு எல்லாம் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

ஆனால் தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிற ஆட்சியாளர்களோ எதுவும் கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து வருகிறார்கள்.

மாநிலத்தின் சுயாட்சியை என்றும் விட்டுக்கொடுக்காமல் திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து போராடும்.

விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், திருச்சுழி மணிவாசகம், மாநில வர்த்தக அணி செயலாளர் வனராஜா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சண்முகச்சாமி, கமலி பாரதி, காரியாபட்டி நகரச் செயலாளர் செந்தில், வர்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருச்சுழி பாஸ்கரன், உடையனாம்பட்டி முருகன், சாமிக்கண்ணு, குரண்டி சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News