செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் முதலிடம் - மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்ததாக முதன்மை கல்வி அதிகாரி தகவல்

Published On 2018-05-16 05:24 GMT   |   Update On 2018-05-16 05:24 GMT
தேர்ச்சி விகிதத்தில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தோம் என்று விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் தெரிவித்தார். #Plus2Result #HSCResult
விருதுநகர்:

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தேர்ச்சி சதவீதத்தில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் 24 ஆயிரத்து 297 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 23 ஆயிரத்து 580 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் 97.05 ஆகும். இதன்மூலம் மாநிலத்திலேயே அதிக தேர்ச்சி கொண்ட முதல் மாவட்டம் என்ற பெருமையை விருதுநகர் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 797 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 285 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.26 சதவீதமாகும்.

இதேபோல் 13 ஆயிரத்து 500 மாணவிகள் தேர்வு எழுதியதில், 13 ஆயிரத்து 295 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.48 ஆகும்.



அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்திலும் விருதுநகர் மாவட்டமே முதலிடம் பெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 84 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மூலம் 8 ஆயிரத்து 153 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7 ஆயிரத்து 645 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.26 சதவீதமாகும்.

விருதுநகர் மாவட்டம் கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 1985-ம் ஆண்டு முதல் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இடையில் 2 ஆண்டுகள் மட்டும் தவற விட்டோம். கடந்த ஆண்டு மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்தோம். அதனை இந்த ஆண்டும் தக்க வைப்பதற்காக மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்தோம். மெல்ல கற்கும் மாணவ-மாணவிகளுக்கு தனியாக கற்றுக்கொடுக்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு சிறப்பான கல்வியை வழங்க ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்த தனிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர், ஆசிரியைகளின் முறையான பயிற்சி, மாணவ-மாணவிகளின் ஈடுபாடு ஆகியவற்றால் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Plus2Result #HSCResult

Tags:    

Similar News