2025 REWIND: கும்பமேளாவும், குறிஞ்சி பூவும் - யார் இந்த காந்த கண்ணழகி மோனலிசா?
- இளம்பெண்ணின் வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.
- பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.
புதுடெல்லி:
'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுக்கிட்டு கொடுக்கும்' என்பது பழமொழி. அதுபோல, இறைவன் கொடுப்பதாக இருந்தால் எந்தத் தடையையும் மீறி, மிக பிரம்மாண்டமாக, எதிர்பாராத வழிகளில் வந்து கொடுப்பார் என்பதை உணர்த்துவதே இந்தப் பழமொழி.
அதுபோல, பிரபலமான ஒரு இளம்பெண்ணின் பிளாஷ்பேக்தான் இது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது கும்பமேளா. 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா.
அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் வீதி வீதியாக ருத்ராட்ச மாலைகள், பாசிமணி விற்றுக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் தனது காந்த விழி கண்களால் இந்திய அளவில் பிரபலமானார். அவரது வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது.
அந்த இளம்பெண்ணின் பெயர் மோனலிசா போஸ்லே. இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்தவர்.
அவர் மாலை விற்பனை செய்யும் விதம், அவரது அழகான தோற்றம் ஆகியவை பக்தர்கள் மட்டுமின்றி மீடியாவிலும் அதிக கவனத்தை ஈர்த்தது. சமூக வலைதளங்களின் அனைத்துப் பக்கங்களிலும் மோனலிசா தோற்றம் வைரலானது. இதைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பும் கிடைத்தது.
'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு ஓ.டி.டி. நிறுவனங்கள் அவரை வெப் தொடரில் நடிக்க வைப்பதற்கு போட்டி போட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதுமட்டுமின்றி, பிரபல கடைகள் திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது மலையாளப் படவுலகிலும் நடித்து வருகிறார்.