செய்திகள்

கே.சி.பழனிசாமியை நீக்கியது சரியல்ல - தங்கதமிழ்ச்செல்வன்

Published On 2018-03-17 13:10 IST   |   Update On 2018-03-17 13:25:00 IST
தமிழகம் நலன் கருதி ஒரு கருத்தை சொன்ன கே.சி.பழனிசாமியை நீக்கியது சரியல்ல என்று தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் கூறினார்.
ஆலந்தூர்:

தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்பது கட்சியல்ல. அது ஒரு தற்காலிக அமைப்புதான். எங்கள் நோக்கம் அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்னத்தையும் கையில் எடுப்பதுதான். அதன்படி செயல்படுகிறோம். நாஞ்சில் சம்பத் விலகிய காரணம் தெரியவில்லை.

அம்மா இங்கு இருக்கும் போது, திராவிடமும், அண்ணாவும் இங்கே இருக்கிறது. தனி கட்சி ஆரம்பிக்க கூடாது என்று நான் சொன்னது உண்மைதான். இந்த அமைப்பு பதிவு செய்யப்படவில்லை.



கே.சி.பழனிசாமி, தமிழகம் நலன் கருதி ஒரு கருத்தை சொன்னார். அதற்காக அவரை கட்சியை விட்டு நீக்குவதா? என்னைப் பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.

கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை அது சாத்தியமல்ல. அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின் படி பொதுச் செயலாளர் தான். கட்சி நிர்வாகிகளை நியமிக்கவும் நீக்கவும் முடியும். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அதை செய்ய முடியாது. அவர்கள் செய்த நியமனமும் செல்லாது, நீக்கியதும் செல்லாது.

பா.ஜனதாவை நாங்கள் ஆதரிக்கவில்லை. அப்படி இருந்து இருந்தால் எங்கள் மீது ஏன் இரட்டை இலை வழக்கு, வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை சசிகலா, தினகரன் முடிவு செய்வார்கள். பா.ஜ.க.வை எதிர்த்து இவர்களால் எதுவும் செய்ய முடியாது. எந்த திட்டங்களையும் கொண்டு வர முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இவர்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியவில்லை.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை பா.ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்தது. அதற்கு அ.தி.மு.க. 37 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தாலே போதும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிடும். பா.ஜனதா கட்சி கவிழ்ந்து விடும். அடுத்ததாக வருகின்ற அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை கண்டிப்பாக அமைத்துதான் ஆக வேண்டிய நிலை ஏற்படும்.

பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதைத்தான் அ.தி.மு.க. கேட்டு கொண்டிருக்கிறது.

இவர்கள் கட்சி கொடி, சின்னம் குறித்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் எதற்குதான் வழக்கு தொடரவில்லை. நாங்கள் கேட்கும் சின்னத்திற்கு வழக்கு தொடர்ந்தனர். நானும் வெற்றிவேலும் ஊழலை வெளிப்படுத்தினோம். அதற்கு எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க.விற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த சந்திரபாபு நாயுடுவை 2 நாளில் சந்தித்து நன்றி சொல்ல இருக்கிறேன்.

அ.தி.மு.க.வினர் யாரை பற்றி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் மத்திய அரசை பற்றி மட்டும் விமர்சிக்க கூடாது. அப்படி பேசினால் நடவடிக்கை எடுப்போம். வழக்கு தொடர்வோம் என்ற மனப்பான்மையில் உள்ளனர். எச்.ராஜா, திராவிட இயக்கத்தை பற்றியும், பெரியாரை பற்றியும் பேசலாம். ஆனால் வழக்கு போட மாட்டார்கள். சந்திரபாபு நாயுடுவுக்கு இருக்கிற தைரியம் இவர்களுக்கு இல்லை. நம்முடைய மாநில உரிமையை கேட்பதற்கு பயப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News