செய்திகள்

செங்கல்பட்டு அருகே கார் கவிழ்ந்து 4 என்ஜினீயர்கள் பலி

Published On 2018-03-17 12:46 IST   |   Update On 2018-03-17 12:46:00 IST
செங்கல்பட்டு அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 என்ஜினீயர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:

திருப்பூரை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 22). இவர் சென்னை பூந்தமல்லியை அடுத்த கந்தன்சாவடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இவருடன் வேலை பார்க்கும் சரத், ஆந்திராவை சேர்ந்த மெகா, கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா, அகிலா மற்றும் நண்பர் நாமக்கல்லை சேர்ந்த பிரசாந்த்குமார் ஆகியோர் விடுமுறையை கழிப்பதற்காக காரில் பாண்டிச்சேரிக்கு சென்றனர்.

இன்று அதிகாலை 6 பேரும் காரில் சென்னையை நோக்கி வந்தனர். காரை தீபக் ஓட்டினார்.

மதுராந்தகத்தை அடுத்த படாளம் அருகே கொளம்பாக்கத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் கார் நொறுங்கி 6 பேரும் படுகாயம் அடைந்தனர். தீபக், ஐஸ்வர்யா, பிரசாத் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மெகா, சரத், அகிலா ஆகியோரை மீட்டு ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெகா உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews

Similar News