திருப்பத்தூர் அருகே பஸ் கவிழ்ந்து 23 பக்தர்கள் காயம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகேயுள்ள மாரண்டபள்ளி, பாரதி நகர் பகுதியை சேர்ந்த 110 பக்தர்கள் 2 தனியார் பஸ்கள் மூலம் வீரபள்ளி கிராமத்தில் இருந்து மேல் மருவத்தூருக்கு இன்று காலை சென்றனர்.
ஆரணியை சேர்ந்த ரவி என்பவர் பஸ்சை ஓட்டினார். வீரபள்ளியில் இருந்து 10 அடி தூரம் பஸ் சென்றபோது குறுகிய சாலையின் இடது புறமாக உள்ள பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி கிராம மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 13 பெண் பக்தர்களும், 10 ஆண் பக்தர்கள் மற்றும் பஸ் டிரைவர் ரவி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு சம்பவத்தில் தேசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று அதிகாலை அரசு டவுன் பஸ் செய்யாறு புறப்பட்டது. பஸ் தவசி என்ற பகுதியில் சென்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது.
அதிர்ஷ்ட வசமாக பஸ்சில் இருந்த பயணிகள் எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயணிகளை மீட்டனர் மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர். #tamilnews