செய்திகள்

பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது: தமிமூன் அன்சாரி

Published On 2017-12-18 10:35 IST   |   Update On 2017-12-18 10:35:00 IST
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது என்று தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.
மயிலாடுதுறை:

மனிதநேய ஜனநாயக கட்சி தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. மயிலாடுதுறை அருகே கிளியனூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு செயல்பாட்டில் கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வது மாநில உரிமையை பறிக்கும் செயல் ஆகும். பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் கவர்னர் ஆய்வு செய்வதில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியாததால் தேர்தல் ஆணையம் தோற்றுப் போய் விட்டது. நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும். எத்தனை சட்டம் இயற்றினாலும் பணப்பட்டுவாடாவை ஒழிக்கவே முடியாது.

வாக்களிக்க பணம் வாங்க மாட்டேன் என்று பொது மக்கள் சபதம் செய்ய வேண்டும். அதேபோல் அனைத்து கட்சிகளும் பணம் கொடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்யும் வரை பணப்பட்டுவாடாவை ஒழிக்க முடியாது.

தமிழகத்தில் பா.ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதல் என்பது வடஇந்தியாவில் பா.ஜனதா தோற்றுவித்த சாதி மோதலை தமிழகத்திலும் நடத்தும் செயலாகும். சாதி மோதலை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News