செய்திகள்

ஒக்கி புயலில் மாயமாக நாகை மீனவர்கள் 6 பேர் மும்பை-குஜராத்தில் கரை சேர்ந்தனர்

Published On 2017-12-13 09:56 IST   |   Update On 2017-12-13 09:56:00 IST
ஒக்கி புயலில் சிக்கி மாயமாக நாகை மீனவர்கள் 6 பேர் நேற்று மும்பை-குஜராத் மாநில கடற்கரை பகுதியில் கரை சேர்ந்தனர். இதையடுத்து இன்னும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீழ்வேளூர்:

நம்பியார் நகரை சேர்ந்த வெற்றிசெல்வன் (வயது28), மாதவன் (22), இனியன் (21), கவிமணி (24), சங்கீதவேல் (22), வினிதன் (21), கவிந்தன் (23), பிரபாகரன் (18), விஜய் (19), தர்மசீலன் (22), மதன் (23), ஆரியநாட்டுத்தெருவை சேர்ந்த விஜயசந்துரு (29) ஆகிய 12 பேரும் கன்னியாகுமரியில் தங்கி மீன்பிடிப்பதற்காக சென்றனர். அப்போது ஏற்பட்ட ஒக்கி புயலில் சிக்கிய 12 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

இதனால் ஒக்கி புயலில் சிக்கி மாயமான 12 மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை ஆரியநாட்டுத்தெருவை சேர்ந்த மீனவர் விஜய சந்துரு நேற்று குஜராத் மாநில கடற்கரை பகுதியில் கரை சேர்ந்தார். இதையடுத்து இன்னும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல புயலில் சிக்கிய நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கூழையார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (53), கலைமணி (30), தமிழ்பாலன் (40), ஏழுமலை (33), வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த சங்கர் (40) ஆகிய 5 பேரும் மும்பையில் படகுடன் கரை சேர்ந்தனர். பின்னர் அங்குள்ள அதிகாரிகள் 5 பேரையும் மீட்டு மும்பை கடற்படை தளத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த 5 மீனவர்களும் வருகிற 15-ந் தேதி சொந்த கிராமங்களுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News