செய்திகள்

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் விபத்தில் பலி

Published On 2017-10-12 09:56 IST   |   Update On 2017-10-12 09:56:00 IST
சிவகங்கை அருகே கார் விபத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் பலியானார்.
சிவகங்கை:

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சேவபாண்டியன் (வயது 57). இவர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த சேவபாண்டியன், வெளிநாட்டிற்கு ரெடிமேட் துணிகள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார்.

சென்னையில் இருந்து அடிக்கடி சொந்த ஊரான ராமநாதபுரம் வந்து செல்வது வழக்கம். அதன்படி ராமநாதபுரம் வந்த சேவபாண்டியன் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டார்.

இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து கார் மூலம் இன்று அதிகாலை அவர் திருச்சி புறப்பட்டார். மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த பாஸ்கரன் காரை ஓட்டினார். சேவபாண்டியனுடன், மணி என்பவரும் காரில் சென்றார்.

கார் சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் ஒக்கூர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேவபாண்டியன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பாஸ்கரன் காயத்துடன் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான சேவபாண்டியன் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பலியான சேவபாண்டியனுக்கு சுதா (44) என்ற மனைவியும், யோகேஸ்வரன், மோகன் என்ற மகன்களும் உள்ளனர். மோகன் சென்னையில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார்.

Similar News