செய்திகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாகையில் கடையடைப்பு போராட்டம்

Published On 2017-04-03 12:13 IST   |   Update On 2017-04-03 12:13:00 IST
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
வேதாரண்யம்:

தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 21- வது நாளாக போராட்டம் நடந்தது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களில் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி மேலாண்ம வாரியம் அமைக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், ஓ. பன்னீர் செல்வம் அணி, த.மா.கா., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தது.

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.ஆனாலும் தஞ்சையில் இன்று கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தது. கும்பகோணத்திலும் கடைகள் திறந்திருந்தன.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி , மன்னார்குடியிலும் கடைகள் திறந்து இருந்தது. மாவட்டத்தில் இரு சில இடங்களில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

நாகை மாவட்டம் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, பகுதியில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தது. வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியில் 273 கடைகள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அடைக்கப்பட்டு இருந்தது.

வணிகர் சங்க பேரவை தலைஞாயிறு பகுதி தலைவர் செல்வக்குமார் தலைமையில் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருந்தனர்.

இதேபோல் கரியாப்பட்டினத்தில் 75 கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. நாகை தெற்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை இணை செயலாளர் முத்து, கரியாப்பட்டினம் வர்த்தக சங்க தலைவர் முகமது யாசின் ஆகியோர் தலைமையில் இன்று ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்வேளூரில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வலிவலம், தேவூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் வணிகர் சங்க பேரவை சார்பில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

Similar News