பொறையாறு அருகே மோட்டார் சைக்கிள் வாய்க்காலில் பாய்ந்து: தந்தை-மகள் பலி
தரங்கம்பாடி:
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பி.முட்லூர் திடீர்குப்பம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் அன்புராஜா (வயது 28), சிற்ப தொழிலாளி. இவருடைய மனைவி மைதிலி (26). இவர்களின் மகள்கள் திலிசா (4), ஹரிசா (1½).
நேற்று காலை அன்புராஜா, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு சென்றார். பின்னர் நேற்று மாலை அங்கிருந்து புறப்பட்டு பி.முட்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பொறையாறு அருகே பூந்தாழை என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கு இருந்த வேலன் வாய்க்காலில் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அன்புராஜ், அவருடைய மகள் திலிசா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் படுகாயம் அடைந்த அவரது மனைவி மைதிலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை ஹரிசா லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்புராஜா, திலிசா ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் தந்தையும், மகளும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.