செய்திகள்

கந்துவட்டி கொடுமையால் டிராவல்ஸ் அதிபர் மனைவியுடன் தற்கொலை

Published On 2017-02-25 12:08 IST   |   Update On 2017-02-25 12:08:00 IST
அரியலூர் அருகே கந்து வட்டி கொடுமை காரணமாக டிராவல்ஸ் உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியன் கொல்லை மேலத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர் டிரால்வஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

இவருக்கும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அகரம் கிராமத்தை சேர்ந்த உஷா (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் கண்டியன் கொல்லையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கதவை தட்டி இருவரையும் அழைத்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதையடுத்து ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே வெங்கடேசனும், உஷாவும் வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 2 பேரும் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் வெங்கடேசன் தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது. அதனை போலீசார் மீட்டு பார்த்தபோது கந்து வட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்ததாக எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

வெங்கடேசனின் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒரு வேன், கார், லோடு ஆட்டோ ஆகியவை இயங்கி வருகிறது. அந்த வாகனங்களை பைனான்ஸ் மூலம் வாங்கி இயக்கி வந்தார். இதற்காக மாதந்தோறும் தவணை செலுத்தி வந்தார். தவணையை செலுத்துவதற்காக சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

10 பேரிடம் ரூ.50 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் கடன் வாங்கிய பணத்தை அவரது நண்பர்கள், உறவினர்களுக்கும் கடனாக கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அதிக வட்டி காரணமாக வெங்கடேசனால் அவர் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. மேலும் அவர் கடன் கொடுத்த நபர்களிடம் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களும் கொடுக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த வெங்கடேசன் இது பற்றி அவரது மனைவியிடம் தெரிவித்ததோடு, தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். இதற்கு அவரது மனைவி உஷாவும் உடன்பட்டுள்ளார்.

அதன்படி நேற்றிரவு இருவரும் வி‌ஷம் குடித்து வீட்டில் படுத்து விட்டனர். இன்று காலை அவர்கள் இறந்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கந்து வட்டி கொடுமை காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News