செய்திகள்

புளியமரத்தில் கார் மோதி சிறுவன் உள்பட 3 பேர் பலி

Published On 2017-02-23 12:09 IST   |   Update On 2017-02-23 12:09:00 IST
ஜெயங்கொண்டம் அருகே புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலா மணி. இவரது மகன் சிவானந்தம் (வயது 36). சென்னையில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் தனது உறவினர் ஒருவரை சென்னையில் இருந்து வேப்பங்குளத்திற்கு காரில் அழைத்து வந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

அப்போது அவரது உறவினரான திருவாரூர் அருகே உள்ள கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி மோகன் (39), ஒரத்தநாடு வட சேரி கீழத்தெருவைச் சேர்ந்த அருண் மகன் கோகுலகிருஷ்ணன் (14) ஆகிய 2 பேரையும் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்றார்.

அவர்களது கார் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீன் சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி நிலை தடுமாறி சாலை ஒரம் உள்ள புளிய மரத்தில் மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த சிவானந்தம், பாரதிமோகன், கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர்கள். இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News