செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாநாடு போல் நடத்த வேண்டும்: தீபா ஆதரவாளர்கள் தீர்மானம்

Published On 2017-02-06 11:04 IST   |   Update On 2017-02-06 11:04:00 IST
கடலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாநாடு போல் நடத்த வேண்டும் என்று தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடலூர்:

மறைந்த முதல்-அமைச் சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் ஏராளமான பேர் செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தீபாவுக்கு அவர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணா நினைவு நாளில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட ஜெ.தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.

தாழஞ்சாவடி செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. துரை.அன்பரசன், குண்டியமல்லூர் காளிமுத்து, கீரப்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆதிமூலம், பரமாத்மா, வடலூர் சந்திரசேகர், நெய்வேலி ராமலிங்கம், வெங்கடேசன், ரெஜினாமேரி ஆகியோர் பேசினர். ஸ்ரீமதி, சந்திரபால், மகாலிங்கம், தமிழரசி, மல்லிகா உள்பட திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஜெ.தீபாவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கிற வகையில் உறுப்பினர் படிவங்களை அச்சிட்டு உறுப்பினர்களை சேர்க்கின்ற பணியை தொடங்க வேண்டும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் ஜெ.தீபா தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை கடலூரில் இருந்து தொடங்க வேண்டும்.

கடலூர் கிழக்குப்பகுதி என்பதால் கீழிருந்து மேல் நோக்கி பயணத்தை தொடருமாறு கேட்டுக்கொள்வது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையும், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையும் மாவட்ட மாநாட்டை போல் நடத்துவது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News