செய்திகள்

அரியலூர் ராணுவவீரர் வைரஸ் காய்ச்சலுக்கு பலி: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

Published On 2016-09-05 11:38 IST   |   Update On 2016-09-05 11:39:00 IST
டெல்லி முகாமில் பணிபுரிந்து வந்த அரியலூர் ராணுவவீரர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியானார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரிதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ராஜதுரை (வயது 24). இவர் கடந்த 2003-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

தற்போது டெல்லி 5-வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்த நிலையில் 15 தினங்களுக்கு முன்பு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து ராஜதுரையின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்து உடனிருந்தனர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ராஜதுரையின் உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனளிக்காமல் ராணுவ மருத்துவமனையில் இறந்துவிட்டார். ராஜதுரையின் உடல் நேற்று சொந்த ஊரான அழகாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ மரிதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து ராஜதுரையின் தந்தை அண்ணாதுரை கூறுகையில், எனது மகன் ராஜதுரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டிற்காக சேவை செய்து வந்தார். திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு ராணவு மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல் கிடைத்து சென்று பார்த்தோம்.

அப்போது என் மகனுக்கு ஸ்க்ரைப் வைரஸ் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் மோசமான ஆபத்தான வைரஸ் என்றும், இதற்கு முன்பே பல ராணுவ வீரர்கள் இதே வைரசால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ராணுவ வீரர்களின் குடும்பத்தார் சிலரையும் இந்த ஸ்க்ரைப் வைரஸ் தாக்கியதும் அவர்களும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக ராணுவ வீரர் உடலுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

Similar News