செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் ரூ.15 லட்சம் பணம் நிரப்பிய பின்னர் ஏ.டி.எம். எந்திரத்திலேயே சாவியை மறந்து விட்டுச்சென்ற ஊழியர்கள்

Published On 2016-09-04 21:00 IST   |   Update On 2016-09-04 21:00:00 IST
ஜெயங்கொண்டம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய பின் ஊழியர்கள் சாவியை அங்கேயே விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இதில் பணம் நிரப்பும் காண்டிராக்ட் பணியை கும்பகோணத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

நேற்றிரவு அந்த நிறுவன ஊழியர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து எந்திரத்தில் ரூ. 10 லட்சம் முதல் 15 லட்சத்திற்கும் மேலாக பணம் நிரப்பினர். எந்திரத்தை திறந்து பணத்தை வைத்து பூட்டிய அவர்கள், பின்னர் சாவியை அங்கேயே மறந்து வைத்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் அங்கு ஜெயங்கொண்டம் போக்குவரத்து முதல்நிலை காவலர் குமார், பணம் எடுக்க சென்றார். அப்போது எந்திரத்தில் சாவி தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமிக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வங்கியின் அதிகாரியை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினர். மேலும் அதிகாரிகள் வரும் வரை அங்கேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் யாரையும் ஏ.டி.எம். மையத்திற்குள் அனுமதிக்க வில்லை.

இந்த நிலையில் வங்கியின் அசோசியேட் அன்புச் செல்வன் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றார். அவரிடம் போலீசார் சாவியை கொடுத்தனர். மேலும் ஏ.டி.எம். மையத்திற்கு காவலர்கள் நியமிக்க வேண்டும் என்றும், அலட்சியமாக செயல்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை கண்டித்து அறிவுரையும் வழங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News