பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கொலையில் 2 வாலிபர்கள் சிக்கினர்- 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
- ராஜாமணியின் ஆடுகளை திருடச்சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்து வடக்கூரை சேர்ந்தவர் நாராயணசாமி. தொழிலாளி. இவரது மகன் ராஜாமணி (வயது 30). இவர் கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகவடிவு என்பவருடன் திருமணம் நடந்தது. ராஜாமணி அந்த பகுதியில் பலசரக்கு கடையும் நடத்தி வந்தார். நேற்று மதியம் அவர் கீழநத்தம் பகுதியில் அமைந்துள்ள பாளை தாலுகா போலீஸ் புறக்காவல் நிலையம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை அழைத்து வர சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ராஜாமணியை திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ராஜாமணியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய நிலையில் அங்கு ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பாளை தாலுகா போலீசார் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? ஏதேனும் முன்விரோதத்தால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கீழநத்தம் மேலூர் மற்றும் தெற்கூர் பகுதிகளை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜாமணியின் ஆடுகளை திருடச்சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே ராஜாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் திரண்டு நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.