தமிழ்நாடு

11 மணி நேரம் நடந்த போராட்டம்- பாதிரியார்கள் உள்பட 500 பேர் மீது வழக்கு

Published On 2022-11-18 07:14 GMT   |   Update On 2022-11-18 07:14 GMT
  • தூத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 8 பங்கு தந்தைகள் மற்றும் மீனவப் பெண்கள் நித்திரவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • முள்வேலி அகற்றுவதில் ஈடுபட்டதாக சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:

தூத்தூர் புனித யூதா கல்லூரியின் பின்புறம் 13 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அகமது ரஷீத் என்பவருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்த நிலத்திற்கு கல்லூரி நிர்வாகம் உரிமை கோரி வந்த நிலையில் வருவாய் துறையினர் அகமது ரசீதுக்கு உரிமை உள்ளது என்று அதற்கான சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அகமது ரசீது நித்திரவிளை போலீசாரின் பாதுகாப்புடன் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்தார். இதனை தூத்தூர் மண்டல மீனவ மக்கள் மற்றும் எட்டு ஊர் பங்கு தந்தைகள் சேர்ந்து முள்வேலியை அப்புறப்படுத்தியதாக தெரிகிறது.

இது தொடர்பாக 8 பங்கு தந்தைகள் மற்றும் 50-க்கு மேற்பட்ட மீனவ மக்கள் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை முள்வேலி அகற்றுவதில் ஈடுபட்டதாக சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரை போலீசார் கைது செய்தனர். ராஜு கைது செய்யப்பட்ட தகவல் அந்த பகுதி மீனவ மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தூத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 8 பங்கு தந்தைகள் மற்றும் மீனவப் பெண்கள் நித்திரவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட ராஜுவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மீனவர்கள் சமாதானம் அடையவில்லை. அங்கேயே திரண்டு இருந்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ராஜுவை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கைதான நபரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 10 மணிக்கு முடிவுக்கு வந்தது. சுமார் 11 மணி நேரம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தூத்தூர் பங்கு தந்தை ஷாபின், சின்னத்துறை பங்கு தந்தை ஜிபு, மார்த்தாண்டம் துறை பங்கு தந்தை சுரேஷ் பயஸ், நீரோடி பங்கு தந்தை கிளிட்டஸ், இரவிபுத்தன் துறை பங்கு தந்தை ரெஜிஸ் பாபு, இரயுமன்துறை பங்கு தந்தை அஜிஸ் ஜாண் சுமேஷ், பூத்துறை பங்கு தந்தை பென்சிகர், வள்ளவிளை பங்கு தந்தை ரிச்சார்டு சகாரியஸ் ஆகிய 8 பாதிரியார்கள் உள்பட 500 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 353 ஆகிய 3 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News