தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்காக ஓட்டு போட கிளம்பி சென்ற 1 லட்சம் வட மாநில தொழிலாளர்கள்...

Published On 2024-05-09 08:37 GMT   |   Update On 2024-05-09 09:29 GMT
  • ஜவுளி நிறுவனங்கள், செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, கல்குவாரிகள், தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
  • தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததோடு தோட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு:

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

தமிழகத்தில் கட்டுமானம் தொடங்கி பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஈரோடு மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் மற்றும் மாவட்ட முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் ஜவுளி நிறுவனங்கள், செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, கல்குவாரிகள், தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

முதற்கட்ட தேர்தலுக்காக சென்றவர்களே இன்னும் ஈரோடு திரும்பாத நிலையில், 3-ம் கட்ட தேர்தலையொட்டி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஜவுளி, உணவகங்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தாளவாடி பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள், தோட்டங்களில் அவர்களின் பங்கு மிகப்பெரியது.

தற்போது அவர்கள் ஓட்டு போடுவதற்காக தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததோடு தோட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் கூறும்போது,

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனிகள், செங்கல் சூளை, ஜவுளி நிறுவனங்கள் முக்கியமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் பணிக்கு வரும் வரை தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

Tags:    

Similar News