விளையாட்டு

ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுமா இந்தியா? 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்

Published On 2025-10-30 08:01 IST   |   Update On 2025-10-30 08:01:00 IST
  • ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
  • 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை பந்தாடியது. அடுத்து தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் வரிசையாக தோல்வி கண்டு தடுமாறியது. அதன் பிறகு நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதியை உறுதி செய்தது. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 7 புள்ளிகள் எடுத்த இந்திய அணி புள்ளி பட்டியலில் 4-வது இடம் பெற்றது.

இந்திய அணியில் பேட்டிங்கில் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (ஒருசதம், ஒரு அரைசதம் உள்பட 365 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் ஓரளவு பங்களிப்பை அளிக்கின்றனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேட்டிங்கில் இருந்து கணிசமான ரன் வந்தால் மேலும் வலுப்பெறும். ஒரு சதம் உள்பட 308 ரன்கள் சேர்த்த தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகியது பெருத்த பின்னடைவாகும். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷபாலி வர்மாவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா (15 விக்கெட்), ஸ்ரீ சரனி (11), கிரந்தி கவுட், சினே ராணா கைகொடுக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் சுற்றில் 330 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றால் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் ஒரு சேர ஜொலிக்க வேண்டியது அவசியமாகும். முதல்முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தும் வேட்கையுடன் ஆயத்தமாகும் இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு முடிவில்லையுடன் (இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) 13 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தது. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 15 வெற்றியை குவித்து வீறுநடை போடுகிறது.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் அலிசா ஹீலி (2 சதம் உள்பட 294 ரன்), ஆஷ்லி கார்ட்னெர், பெத் மூனி, போபி லிட்ச் பீல்டும், பந்து வீச்சில் அலனா கிங் (13), சோபி மொலினிக்சும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

ஆல்-ரவுண்டர்கள் அனபெல் சுதர்லாண்ட் (114 ரன், 15 விக்கெட்), ஆஷ்லி கார்ட்னெர் (2 சதம் உள்பட 265 ரன், 7 விக்கெட்) அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். தசைபிடிப்பால் கடந்த 2 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் அலிசா ஹீலி உடல் தகுதியை எட்டி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும்.

ஏற்கனவே லீக் சுற்றில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பதம்பார்த்த ஆஸ்திரேலிய அணி அதே உற்சாகத்துடன் வரிந்து கட்டும். மொத்தத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காணும் இந்திய அணி தக்க பதிலடி கொடுக்குமா? அல்லது மறுபடியும் பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தீப்தி ஷர்மா, சினே ராணா, ரேணுகா சிங் அல்லது ஷபாலி வர்மா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி அல்லது ராதா யாதவ்.

ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்), போபி லிட்ச்பீல்டு, எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், சோபி மொலினிக்ஸ், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News