விளையாட்டு

தமிழக முதல்வரும் துணை முதல்வரும் எல்லா சூழலிலும் எனக்கு உதவியாக இருந்தனர்- குகேஷ்

Published On 2024-12-16 15:02 IST   |   Update On 2024-12-16 15:02:00 IST
  • இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு.
  • செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை தரப்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய குகேஷ், "எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியது கடினமாக இருந்தது. டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். நானே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு. வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. சிறிய வயதில் இருந்தே ஆசைப்பட்டது நிறைவேறிய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் எல்லா சூழலிலும் தேவையான நிதியுதவி வழங்கி ஊக்குவித்தனர். சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரை அரசு நடத்தியது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதுபோல தொடர் ஆதரவு கிடைத்தால் பல இளம் செஸ் வீரர்கள் வருவார்கள்" என்று தெரிவித்தார்.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

Tags:    

Similar News