விளையாட்டு

தங்களது அணியில் விளையாட ரொனால்டோவுக்கு ரூ.1,838 கோடி கொடுக்க சவுதி கிளப் விருப்பம்

Update: 2022-11-28 07:39 GMT
  • 37 வயதான ரொனால்டோ சவுதி கிளப்பின் அழைப்பை ஏற்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும்.

ரியாத்:

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த அவர் கால்பந்து உலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

அதிகம் பணம் சம்பாதிக்கும் வீரரான ரொனால்டோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதில் அவர் சாதனையும் புரிந்துள்ளார்.

இந்த நிலையில் உலக கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது ரொனால்டோ இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

அந்த கிளப் நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து அவர் மான்செஸ்டர் யுனைடட் கிளப் மானேஜர் எரிக் டென்னை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் சவுதி அரேபியா கிளப் ஒன்று ரொனால்டோ தங்கள் கிளப்பில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை வழங்க முன் வந்துள்ளது.

ரியாத்தில் உள்ள அல்நாசர் கிளப் ரொனால்டோவை 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ய ரூ.1838 கோடி தர இருப்பதாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும். இதை சி.பி.எஸ். ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

37 வயதான ரொனால்டோ சவுதி கிளப்பின் அழைப்பை ஏற்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் அந்த கிளப்பில் விளையாட தனது விருப்பத்தை தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது ரொனால்டோவின் இறுதி முடிவுக்காக அந்த கிளப் காத்திருக்கிறது.

அல் நாசர் அணி ஆசியாவின் சிறந்த கிளப்களில் ஒன்றாகும். 9 'லீக்' பட்டங்களை வென்றுள்ளது. ரொனால்டோ கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக கோப்பையில் கானாவுக்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News