விளையாட்டு

தனியார் கபடி போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய பாகிஸ்தான் வீரர்- நடவடிக்கை எடுக்க முடிவு

Published On 2025-12-19 14:37 IST   |   Update On 2025-12-19 14:37:00 IST
  • இந்திய அணி என்று பெயரிட்டது கடைசி வரை எனக்கு தெரியாது.
  • கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் தனியார் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறார்கள்.

கராச்சி:

பக்ரைனில் கடந்த 16-ந்தேதி தனியார் அமைப்பு சார்பில் ஜி.சி.சி. கோப்பைக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஈரான் போன்ற பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டு அதன் சார்பில் வீரர்கள் ஜாலியாக பங்கேற்றனர். பெரும்பாலான அணிகளில் அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களே இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் இந்திய அணியின் சார்பில் களம் இறங்கிய வீரர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தும் ஒருவர். அவர் இந்திய அணிக்குரிய சீருடை அணிந்தும், தேசிய கொடியை உற்சாகமாக அசைத்தப்படியும் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை கவனத்தில் கொண்டுள்ள பாகிஸ்தான் கபடி சம்மேளனம் அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற 27-ந்தேதி அவசர கூட்டத்தை கூட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் கபடி சம்மேளன செயலாளர் ராணா சர்வார் கூறுகையில், 'இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள், இந்திய தனியார் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆனால் அவர்களுக்காக உபைதுல்லா ஆடியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கபடி சம்மேளனத்திடமோ அல்லது பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திடமே எந்த அனுமதியும் பெறாமல் சென்றுள்ளார். அவர் மட்டுமல்ல இவ்வாறு 16 வீரர்கள் பக்ரைன் சென்றுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

உபைதுல்லா ராஜ்புத் கூறுகையில், 'இது தனியார் போட்டி. இதில் இந்தியா, பாகிஸ்தான் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் இந்திய அணி என்று பெயரிட்டது கடைசி வரை எனக்கு தெரியாது. கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் தனியார் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறார்கள். ஆனால் ஒரு போதும் இந்தியா அல்லது பாகிஸ்தான் பெயரில் விளையாடவில்லை. தவறுதலாக இந்தியாவின் பெயரில் விளையாடியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

Tags:    

Similar News