விளையாட்டு

பெண்கள் கிராண்ட்பிரி செஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கோனேரு ஹம்பி

Published On 2025-04-24 05:12 IST   |   Update On 2025-04-24 05:12:00 IST
  • பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிராவின் புனேயில் நடந்தது.
  • இந்தியாவின் கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

மும்பை:

பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்து வந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று போட்டி நேற்று நடந்தது.

வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, 84-வது நகர்த்தலில் நுர்குல் சலிமோவாவை (பல்கேரியா) தோற்கடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர்.

ஒரு தோல்வியும் சந்திக்காத ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான கோனேரு ஹம்பி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைச் சொந்தமாக்கினார்.

சீனாவின் ஜூ ஜினெரும் 7 புள்ளிகளுடன் அவருடன் சமநிலையில் இருந்தார். ஆனால் போட்டி விதிப்படி கருப்பு நிற காயுடன் (5 முறை) விளையாடுகையில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஹம்பி மகுடம் சூடினார். ஜினெர் 2-வது இடம் பெற்றார்.

இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 5½ புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். தமிழகத்தின் வைஷாலி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Tags:    

Similar News