விளையாட்டு

IPL 2025: கொல்கத்தா-லக்னோ அணிகள் இன்று மோதல்

Published On 2025-04-08 08:17 IST   |   Update On 2025-04-08 08:17:00 IST
  • வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் இவ்விரு அணிகளும் வெற்றி உத்வேகத்தை தொடர தீவிரம் காட்டுகின்றன.
  • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன. நேற்று முன்தினம் நடக்க இருந்த இந்த ஆட்டத்துக்கு ராமநவமி கொண்டாட்டம் காரணமாக பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கொல்கத்தா போலீசார் கைவிரித்ததால் 2 நாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.

கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்த கொல்கத்தா அணி 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் பணிந்தது. முந்தைய ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது.

கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் மிடில் வரிசையில் கேப்டன் ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டான் டி காக், சுனில் நரின் நல்ல தொடக்கம் கொடுக்காதது தலைவலியாக இருக்கிறது. பந்து வீச்சில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின் மிரட்டக்கூடியவர்கள்.

லக்னோ அணியும் 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் அடங்கியது. கடந்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பையை பதம் பார்த்தது.

லக்னோ அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், மார்க்ரம், ஆயுஷ் பதோனியும், பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் (0, 15, 2, 2) பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.

வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் இவ்விரு அணிகளும் வெற்றி உத்வேகத்தை தொடர தீவிரம் காட்டுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News