மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்
- இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 12-வது முறையாகும்.
- இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது.
கொழும்பு:
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 59 ரன்னில் இலங்கையையும், 2-வது போட்டியில் (இந்தூர்) நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், 3-வது ஆட்டத்தில்(கொழும்பு) வங்காளதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 4-வது போட்டியில் (கவுகாத்தி) இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தன. இன்று நடைபெறும் 5-வது ஆட்டத்தில் (கொழும்பு) ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
கொழும்பில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், தீப்தி சர்மா, அமன் ஜோத் கவூர்,ஹார்லீன் தியோல், தீப்தி சர்மா, சினே ராணா , ஸ்ரீ சரணி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 12-வது முறையாகும். இதுவரை நடந்த 11 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றது. நாளையும் இந்தியாவின் வெற்றி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.