கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை மோதல்

Published On 2025-09-30 07:12 IST   |   Update On 2025-09-30 07:12:00 IST
  • அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
  • இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை.

கவுகாத்தி:

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகமாகி, 4 ஆண்டுக்கு ஒரு முறை (தவிர்க்க முடியாத காரணத்தால் சில தடவை தாமதம் ஆகியிருக்கிறது) நடத்தப்படுகிறது.

இதன்படி 13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.

இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி உலகக் கோப்பையை ஒரு போதும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இந்திய கேப்டன் 36 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 5-வது உலகக் கோப்பை போட்டியாகும். அனேகமாக அவருக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். சொந்த மண்ணில் முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்தும் உத்வேகத்துடன் ஆயத்தமாகும் இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாகும்.

சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை கூட நெருங்கியதில்லை. தான் ஓய்வு பெறுவதற்குள் அரைஇறுதியில் கால்பதித்து விட வேண்டும் என்பதே தனது கனவு என கேப்டனும், ஆல்-ரவுண்டருமான சமாரி அட்டப்பட்டு கூறியிருக்கிறார். ஆனால் சமாரி அட்டப்பட்டு தான் இலங்கையின் ஆணி வேர். அவர் ஜொலிப்பதை பொறுத்தே அவர்களின் வெற்றி வாய்ப்பு அமையும். போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் ஆர்வம் காட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகள் இதுவரை 35 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 3-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் வருமாறு:-

இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.

இலங்கை: சமாரி அட்டப்பட்டு (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவானி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்னே, அச்சினி குலசூர்யா, சுகந்திகா குமாரி, மால்கி மதரா, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீரா, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்கா.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News