மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்தை 125 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தென்ஆப்பிரிக்கா
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 319 ரன்கள் குவித்தது.
- இங்கிலாந்து 194 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா- 3ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 143 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 169 ரன்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க பேட்டர் தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் சேர்த்தார். காப் 33 பந்தில் 42 ரன்களும், ட்ரைசன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 33 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஷோபி எக்லெஸ்டோன் 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். லாரன் பெல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 320 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதலிலேயே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏமி ஜோன்ஸ், டேமி பியூமோன்ட், ஹீதர் நைட் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த நாட் ஸ்சிவர்-ப்ருன்ட் 64 ரன்களும், அலிஸ் கேப்சி 50 ரன்களும், டேனி வையாட்-ஹோட்ஜ் 34 ரன்களும் அடித்தனர். என்றாலும், கடைநிலை பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 42.3 ஓவரில் 194 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவின் தொடக்க பந்து வீச்சாளர் காப் 5 விக்கெட் சாய்த்தார்.