கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? காயம் குறித்து அப்டேட் கொடுத்த சூர்யகுமார் யாதவ்

Published On 2025-08-27 14:15 IST   |   Update On 2025-08-27 14:15:00 IST
  • கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆப்ரேஷன்களை செய்துள்ளேன்.
  • ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் அண்மையில் குடலிறக்க பாதிப்பிற்கான அறுவை சிகிச்சையை ஜெர்மனி சென்று மேற்கொண்டு இருந்தார். அதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஓய்வெடுத்து வந்த அவர் அண்மையில் தான் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டார். அதன் பின்னர் தற்போது நல்ல உடற்தகுதியை எட்டியுள்ளார்.

ஆனாலும் அவரது உடற்தகுதி இந்த தொடரில் விளையாடும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறதா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் தனது காயம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தின் போது நான் எனக்கு இருக்கும் பாதிப்பை கண்டறிந்தேன். அதன்பிறகு ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்ற பாதிப்பை சந்தித்து அப்போதும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தேன். அதற்கு முன்னதாக கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தேன். இப்படி தொடர்ச்சியாக சில இடங்களில் எனக்கு காயம் இருந்தது உண்மைதான். அதனால் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆப்ரேஷன்களை செய்துள்ளேன்.

ஆனாலும் தற்போது மிகச் சிறப்பாக காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதாக நினைக்கிறேன். நான் கடந்த ஐந்து-ஆறு வாரங்களாகவே நல்ல முறையில் ஆசிய கோப்பை போட்டிகளுக்காக தயாராகியுள்ளேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் நல்ல பயிற்சியையும் எடுத்துள்ளேன். ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாலே ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டேன்.

தற்போது அனைத்தும் முடிந்து நல்ல முறையில் தயாராகி மிகச் சிறப்பாக இருப்பதாக உணருகிறேன். எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் முழுவதும் எந்த ஒரு சிரமமும் இன்றி விளையாடும் அளவிற்கு என்னுடைய உடற்தகுதி சிறப்பாக உள்ளது.

என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Tags:    

Similar News