விஜய் ஹசாரே டிராபி யாருக்கு?: இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா, விதர்பா இன்று மோதல்
- முதல் அரையிறுதியில் விதர்பா அணி நடப்பு சாம்பியன் கர்நாடகாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
- 2வது அரையிறுதியில் சவுராஷ்டிரா அணி பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரில் நடந்து வந்தது.
லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றன.
காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதல் அரையிறுதியில் விதர்பாவும், 2வது அரையிறுதியில் சவுராஷ்டிரா அணியும் வென்றன.
இந்நிலையில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.
இதில் ஹர்விக் தேசாய் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும், ஹர்ஷ் துபே தலைமையிலான விதர்பா அணியும் மோதுகின்றன.
சவுராஷ்டிரா அணி அரையிறுதியில் பஞ்சாப்பை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதேபோல்,
விதர்பா அணி அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கர்நாடகாவுக்கு அதிர்ச்சி அளித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
சவுராஷ்டிரா அணியில் பேட்டிங்கில் ஹர்விக் தேசாய் (561 ரன்), விஸ்வராஜ் ஜடேஜா (536), சம்மார் காஜரும், பந்துவீச்சில் அன்குர் பன்வார், சேத்தன் சகாரியாவும் பலம் சேர்க்கின்றனர்.
விதர்பா அணியில் பேட்டிங்கில் அமன் மொகாதே (781 ரன்), துருவ் ஷோரேய் (515), ரவிக்குமார் சமர்த், பந்து வீச்சில் நாசிகெட் புத், யாஷ் தாக்குர், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சவுராஷ்டிரா அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல முயற்சிக்கும். அதேநேரம், விதர்பா அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்ற போராடும்.
சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.