ஜடேஜாவின் ஃபார்ம் குறித்து கவலை இல்லை: முகமது சிராஜ் சொல்கிறார்
- ஜடேஜா முதல் போட்டியில் 44 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
- 2-வது போட்டியில் 56 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஜடேஜா இடம் பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் முதல் இரண்டு போட்டிகள் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
முதல் ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில் ஜடேஜாவின் ஃபார்ம் கவலை அளிக்கவில்லை என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-
ஜடேஜா ஃபார்ம் குறித்து இந்திய அணியில் எந்த ஒரு கவலையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒரு விக்கெட் வீழ்த்துவதுதான் விசயம். அவர் ஒரு விக்கெட் வீழ்த்திவிட்டால், பின்னர் அவரை வேறொரு வீரராக பார்ப்பீர்கள்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்தார்.
ஜடேஜா சமீப காலமாக 2900 ரன்கள் விட்டுக்கொடுத்து 32 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு நாள் போட்டியில் 209 போட்டிகளில் 232 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.