தொடக்க வீரராக சஞ்சு என்ன தவறு செய்தார்? உத்தப்பா சரமாரி கேள்வி
- சாம்சன் தொடக்க வீரராக 3 சதங்கள் அடித்தார்.
- அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக நல்ல சராசரியைக் கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம்சன் தன்னை நிரூபித்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில் எந்த தவறும் செய்யாத சாம்சனை சொதப்பும் கில்லுக்கு பதிலாக ஓப்பனிங்கில் விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் ஜோடியை மாற்றும் அளவுக்கு என்ன தவறு செய்தார்கள் என்ற கேள்வியை நான் கேட்கிறேன்? சம்சானுக்கு முன் கில் டி20 அணியில் இருந்தார் என்று சூர்யகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் சாம்சன் வாய்ப்பைப் பெற்ற போது 3 சதங்கள் அடித்தார். அதன் பின்பே அபிஷேக், திலக் வர்மா ஆகியோரும் சதங்களை அடித்தார்கள். எனவே அவருடைய சதம் நமது இளம் வீரர்களை உத்வேகமடைய வைத்துள்ளது. அந்த சமயத்தில் இந்தியாவுக்காக அடுத்த டி20 ஓப்பனர் யார்? என்ற நிலைமையே இருந்தது.
அந்த சூழ்நிலையில் அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக நல்ல சராசரியைக் கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம்சன் தன்னை நிரூபித்தார். இருப்பினும் அவரை மிடில் ஆர்டருக்கு நகர்த்திய நீங்கள் தற்போது மெதுவாக கழற்றி விட்டுள்ளீர்கள். சாம்சன் என்ன தவறு செய்தார்? என்பதே என்னுடைய கேள்வி. தற்சமயத்தில் துணைக் கேப்டனாக இருந்தாலும் கில்லுக்கு எதுவும் வேலை செய்யாததால் அழுத்தத்திற்குள் இருக்கிறார். எனவே பெரிதாக எந்த தவறும் செய்யாத சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
என்று கூறினார்.