பெங்களூரு கேப்டன் மந்தனா -உ.பி. கேப்டன் லானிங்
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - உ.பி.வாரியர்ஸ் இன்று மோதல்
- முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது.
- கடைசி லீக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த பெங்களூரு தீவிரம் காட்டும்.
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் 2-வது அணியாக நுழையும்.
இதுவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (10 புள்ளி) அணி மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து இருக்கிறது. எஞ்சிய இரு இடங்களுக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் (8 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (6 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 புள்ளி), உ.பி.வாரியர்ஸ் (4 புள்ளி) ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சி இருக்கிறது. கடைசி இடத்தில் இருக்கும் உ.பி.வாரியர்ஸ் அணி ரன் ரேட்டிலும் பின்தங்கி இருப்பதால் தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும்.
இந்த நிலையில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கடைசி இடத்தில் உள்ள உ.பி.வாரியர்சை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது. அதன் பிறகு 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடமும், 15 ரன் வித்தியாசத்தில் மும்பையிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவி தொய்வு கண்டுள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (236 ரன்), ரிச்சா கோஷ் (183), கிரேஸ் ஹாரிசும், பந்து வீச்சில் லாரென் பெல் (11 விக்கெட்), நடினே டி கிளார்க், சயாலி சத்கரேவும் நல்ல நிலையில் உள்ளனர்.
உ.பி.வாரியர்ஸ் அணியில் பேட்டிங்கில் கேப்டன் மெக் லானிங் (207 ரன்), ஹர்லீன் தியோலும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மாவும் நம்பிக்கை அளிக்கின்றனர். 243 ரன்கள் குவித்த போபி லிட்ச்பீல்டு காயம் காரணமாக வெளியேறி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான அமே ஜோன்ஸ் (ரூ.50 லட்சம்) சேர்க்கப்பட்டுள்ளார்.
மொத்தத்தில் இன்றைய தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த பெங்களூரு தீவிரம் காட்டும். ஏற்கனவே முந்தைய லீக்கில் உ.பி. வாரியர்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையோடு இறங்குவார்கள். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு காலியாகி விடும் என்பதால் உ.பி.வாரியர்ஸ் வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.