கிரிக்கெட் (Cricket)

ENGvIND.. கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: ஓவலில் இந்திய அணி சாதித்தது என்ன?

Published On 2025-07-30 18:34 IST   |   Update On 2025-07-30 18:34:00 IST
  • இந்திய அணி ஓவலில் 1936-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது.
  • இதுவரை 15 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது.

லண்டன்:

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை தொடங்க உள்ள நிலையில் அந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன என்பதை பார்க்கலாம்.

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.

இந்த தொடரில் முதல் 4 டெஸ்டுகளிலும் பேட்ஸ்மேன்களே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதுவரை 18 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இறுதி டெஸ்ட் நடக்கும் ஓவலில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசம வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆடுகளத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் 2014-ம் ஆண்டில் இருந்து (கடைசி 11 டெஸ்ட்) இங்கு நடந்துள்ள அனைத்து டெஸ்டுகளிலும் முடிவு கிடைத்துள்ளது.

இந்திய அணி ஓவலில் 1936-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இங்கு இதுவரை 15 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. இதில் 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும்.

1971-ம் ஆண்டு அஜீத் வடேகர் தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இதன் 2-வது இன்னிங்சில் பக்வத் சந்திரசேகரின் சுழல் ஜாலத்தை (6 விக்கெட்) சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 101 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு டெஸ்டில் கிடைத்த முதல் வெற்றி இது தான். அந்த வகையில் ஓவல் மைதானம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் மற்றொரு வெற்றி 2021-ம் ஆண்டில் கிட்டியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது.

2007-ம் ஆண்டில் 664 ரன்கள் எடுத்தது இங்கு இந்தியாவின் அதிகபட்சமாகும். 2014-ம் ஆண்டில் 94 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும். இந்திய தரப்பில் 10 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் இரட்டை சதம் அடித்ததும் அடங்கும்.

இங்கிலாந்து அணி இங்கு 106 டெஸ்டுகளில் விளையாடி 45-ல் வெற்றியும், 24-ல் தோல்வியும், 37-ல் டிராவும் சந்தித்துள்ளது. 1938-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 903 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒட்டுமொத்தத்தில் ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். 1896-ம் ஆண்டு ஆஸ்திரேலியா 44 ரன்னில் முடங்கியது மோசமான ஸ்கோராகும்.

இங்கிலாந்தின் லியோனர்ட் ஹட்டன் (364 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1938-ம் ஆண்டு), தென் ஆப்பிரிக்காவின் அம்லா (311 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 2012-ம் ஆண்டு) முச்சதம் விளாசியுள்ளனர். விக்கெட் வேட்டையில் இங்கிலாந்தின் இயான் போத்தம் (52 விக்கெட்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (50 விக்கெட்) டாப்-2 இடங்களில் உள்ளனர்.

Tags:    

Similar News