டி20 தொடர்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
- 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவாக காணப்படுகிறது.
- இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
உலக சாம்பியனான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் இறங்குகிறது. ஒரு நாள் தொடருடன் ஒப்பிடும் போது இது முற்றிலும் மாறுபட்ட அணியாகும்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவாக காணப்படுகிறது. 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் 27 ஆட்டங்களில் ஆடி 24-ல் வெற்றி பெற்று ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் (20 ஓவர்) தோல்வியே சந்திக்காமல் மகுடம் சூடியது.
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா சூப்பர் பார்மில் உள்ளார். ஆசிய கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் ஆடி 3 அரைசதம், 19 சிக்சர் உள்பட 314 ரன்கள் குவித்து தொடர்நாயகனாக ஜொலித்தார். சுப்மன் கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் சூர்யகுமாரின் ஆட்டத்திறன் பாதிப்பு தான் கவலை அளிக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 7 இன்னிங்சில் 72 ரன் மட்டுமே எடுத்த சூர்யகுமார் யாதவ் கடைசி 14 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரும் ரன்வேட்டை நடத்த தொடங்கி விட்டால் அணி இன்னும் வலுவடையும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள். 3-வது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா இடையே போட்டி நிலவுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை உருவாக்கும் திட்டத்திற்கு, அச்சாரமாக இந்த தொடர் அமையும். அதனால் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வரிந்து கட்டுவார்கள்.
ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளூர் சூழலில் ஆடுவது சாதகமாகும். ஒரு நாள் தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். பின்னங்கால் காயத்தில் இருந்து குணமடைந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார். மற்றபடி கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 37 பந்தில் சதம் அடித்தவரான டிம் டேவிட், மிட்செல் ஓவன் அதிரடி காட்ட ஆயத்தமாக உள்ளனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், சீன் அப்போட் மிரட்டக்கூடியவர்கள்.
மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
கான்பெர்ராவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும். லேசாக மழை பெய்வதற்கு கூட வாய்ப்புள்ளது என அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மைதானத்தில் ஆண்கள் 20 ஓவர் மற்றும் பிக்பாஷ் கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன் எடுக்கப்பட்டதில்லை. இங்கு இதுவரை நடந்துள்ள ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 178 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். பவுண்டரி தூரம் அதிகம் என்பதால் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே அல்லது ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட் அல்லது சேவியர் பார்லெட், நாதன் எலிஸ், மேட் குனேமேன், ஜோஷ் ஹேசில்வுட்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.