அதிரடி அணுகுமுறைக்கு கம்பீர் காரணமல்ல.. ரோகித் சர்மாவை புகழ்ந்த சுனில் கவாஸ்கர்
- இங்கிலாந்தைச் சேர்ந்த சிலர் கம்பீர் பயிற்சியாளராக வந்துள்ளதால் கம்’பால் என்றழைத்தனர்.
- கம்பீர் இரண்டு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2- 0 (2) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த தொடரில் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 2 நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேதத்தை அடித்து நொறுக்கி இந்தியா அட்டகாசமான வெற்றி பெற்றது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த இந்தியா 5 உலக சாதனைகளையும் படைத்தது. அப்போது தங்களுடைய பஸ்பால் அணுகுமுறையை காப்பி அடித்து இந்தியா விளையாடி வெற்றி கண்டதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பெருமை பேசினார்.
இருப்பினும் கம்பீர் தலைமையில் இந்தியா அதிரடியாக விளையாடும் இந்த அணுகுமுறைக்கு பெயர் கம்'பால் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறினார். அதே போல இந்தியாவின் புதிய அணுகு முறையை கம்'பால் என்று ரசிகர்கள் அழைப்பதை சமூக வலைதளங்களில் பார்த்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.
இந்நிலையில் 2023 உலகக் கோப்பை முதல் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா அதிரடியாக விளையாடும் அணுகுமுறைக்கு "கோஹிட்" என்பதே சரியான பெயர் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு செய்தித்தாள் இந்திய பேட்டிங்கை பாஸ்பால் என்றழைத்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த சிலர் கம்பீர் பயிற்சியாளராக வந்துள்ளதால் கம்'பால் என்றழைத்தனர். பென் ஸ்டோக்ஸ் - ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இங்கிலாந்தின் அணுகுமுறை முழுமையாக மாறியது.
ஆனால் ரோகித் சர்மா தலைமையில் கடந்த சில வருடங்களாகவே நம்முடைய இந்திய அணி அதிரடியாக விளையாடுவதை பார்த்து வருகிறோம். கம்பீர் இரண்டு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக இருந்து வருகிறார். எனவே இந்த அணுகுமுறைக்கு அவர்தான் காரணம் என்று காட்டுவது மிகவும் உயர்ந்த தரத்தின் கால் நக்கலாகும்.
உண்மையில் மெக்கல்லம் போல கம்பீர் இந்த பாணியில் பேட்டிங் செய்ததில்லை. ரோகித் மட்டுமே தொடர்ந்து அவ்வாறு செய்தார். எனவே இந்த பால், அந்த பால் என்று சொல்வதற்கு பதிலாக ரோகித் சர்மா பெயரின் முதல் பகுதியை வைத்து "கோஹிட்" என்று இதை சொல்லலாம். பஸ்பால் என்றழைக்கும் சோம்பேறி விருப்பத்தை விட புத்திசாலித்தனமான இந்த நாகரீக பெயரை கொண்டு அழைக்கலாம்.
என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.