கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமனம்

Published On 2026-01-06 08:32 IST   |   Update On 2026-01-06 08:32:00 IST
  • இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகல்.
  • எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் மும்பை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் இன்று இமாசலபிரதேசத்தையும், நாளை மறுநாள் பஞ்சாப்பையும் சந்திக்கிறது.

இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகி இருப்பதால் எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.

கடந்த அக்டோபர் 25-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பந்தை பிடிக்கும் போது கீழே விழுந்து காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் அதன் பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. வருகிற 11-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யரை, விஜய் ஹசாரே போட்டியில் ஆடி உடல் தகுதியை நிரூபிக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் அவர் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்தே அவரது இடம் அணியில் உறுதியாகும்.

Tags:    

Similar News