Sanju Samson | இன்ஸ்டாகிராமில் துல்கர் சல்மானை முந்தி சஞ்சு சாம்சன் புதிய சாதனை
- டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார்
- டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
இந்த உலககோப்பைக்கு முன்பு சஞ்சு சாம்சனுக்கு இன்ஸ்டாகிராமில் 1.4 கோடி பின்தொடர்பவர்கள் இருந்தனர். உலகக்கோப்பையில் அவரின் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து சஞ்சு சாம்சனின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1.78 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட கேரளாவை சேர்ந்த ஆண் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். 1.59 கோடி பின்தொடர்பவர்களை கொண்ட துல்கர் சல்மானை முந்தி இந்த சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
அதே சமயம் கேரளாவை சேர்ந்தவர்களில் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்கள் கொண்ட நபர்களில் கீர்த்தி சுரேஷ் 1.88 கோடி பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 1.78 பின்தொடர்பவர்களுடன் சஞ்சு சாம்சன் 2 ஆம் இடத்திலும் 1.66 பின்தொடர்பவர்களுடன் அனுபமா பரமேஸ்வரன் 3 ஆம் இடத்திலும் 1.59 கோடி பின்தொடர்பவர்களுடன் துல்கர் சல்மான் 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.
வரும் ஐபிஎல் தொடர் முடிவதற்குள் கீர்த்தி சுரேஷை முந்தி இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்கள் கொண்ட கேரளாவை சேர்ந்த நபர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.