null
இந்தியா வராவிட்டால் சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து விலகி விடுவோம்: ஐசிசி-க்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
- பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று இந்திய அணி அறிவித்துவிட்டது.
- இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகி விடுவதாக கூறியுள்ளது.
கராச்சி:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக 2025-ல் நடத்துகிறது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை அங்குள்ள கராச்சி, லாகூர் ராவல் பிண்டியில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா, போட்டியை நடத்தும். பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் (பி பிரிவு) ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.
இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டவட்டமாக தெரிவித்தது.
பி.சி.சி.ஐ. தனது நிலைப்பாட்டை ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இந்திய அணி வர மறுப்பதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்துள்ளது. இதை கைவிட பாகிஸ்தான் கிரிக்கெட வாரியம் ஐ.சி.சி.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா விளையாட மறுப்பதால் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் இழக்கிறது. இதனால் இரு நாடுகள் இடையேயான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை ஐ.சி.சி. அல்லது ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடுவதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்துமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பது தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்குமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா மோதிய ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதில் இருந்தது வாபஸ் பெற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.