ஒவ்வொரு போட்டியில் 200 முதல் 220 ரன்கள் வரை சேஸிங் செய்யும் நிலை ஏற்பட்டது: ராகுல் டிராவிட் விரக்தி
- ராஜஸ்தான் அணியால் இலக்கை நெருங்கி வெற்றி பெற முடியவில்லை.
- வெற்றி பெறக் கூடிய சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் 2025 சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்க, பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து 200 ரன்களுக்கும் மேல் சேஸிங் செய்ய முயற்சித்து சொற்ப ரன் வித்தியசாத்தில் தோல்வியைடந்து பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது.
இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் ஐந்து போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் 8 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்துள்ளது.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கெதிராக 10 ரன்னில் தோல்வியடைந்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 219 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 209 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடக்க ஜோடியான ஜெய்வால் (50)- சூர்யவன்ஷி (40) முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 76 ரன்கள் குவித்தது. ஜெய்வால் ஆட்டமிழக்கும்போது 8.4 ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-
பேட்ஸ்மேன்களை குறை சொல்ல எந்த காரணமும் இல்லை. பந்து வீச்சில்தான் குறை உள்ளதாக நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இது 220 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் என நான் நினைக்கவில்லை. இது 195 முதல் 200 ரன்கள் அடிக்கக்கூடிய விக்கெட். நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம்.
நிங்கள் ஸ்கோரை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. விக்கெட் வீழ்த்துவது மற்றும் ரன்னை கட்டுப்படுத்துவது ஆகிய இரண்டிலும்தான். ஒவ்வொரு போட்டியில் நாங்கள் 200 முதல் 220 வரை சேஸிங் செய்ய வேண்டியிருந்தது.
இது மிகவும் கடினமானது. ஸ்கோரை நெருங்கி வந்தோம், ஆனால், எங்களால் போட்டியை முடிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. இந்த தொடர் முழுவதும் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சற்று கூடுதலாக ரன் சேர்க்க முடியாததால் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை என்பதை உணர்வீர்கள். கடைநிலை வீரர்களுக்கு கிளக் ஆகி எங்களுக்கு தேவையான பெரிய ஷாட்கள் கிடைக்கவில்லை.
இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.