ஐ.பி.எல்.(IPL)
null

மன்கட் விவகாரம்: திக்வேஷ் ரதியை அவமானப்படுத்திய ரிஷப் பண்ட்- அஸ்வின்

Published On 2025-05-28 19:55 IST   |   Update On 2025-05-28 20:31:00 IST
  • பேட்ஸ்மேன் தனக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக ஒரு அடி முன்னே செல்கிறார்.
  • மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம்.

2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் ஜிதேஷ் சர்மாவை லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி, மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், இந்த அவுட் முறையீட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதனை பலரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் மன்கட் செய்த பந்துவீச்சாளரை ரிஷப் பண்ட் அவமானப்படுத்தி விட்டதாகவும், இப்படி செய்தால் அந்தப் பந்துவீச்சாளர் எப்படி மீண்டும் மன்கட் முறையில் விக்கெட் எடுக்க முயற்சி செய்வார்? எனவும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம். அந்தப் பந்துவீச்சாளர் கூனிக்குறுகிப் போயிருப்பார். இனி இதுபோல ரன் அவுட் செய்ய முயற்சிக்க மாட்டார். ஏன் அதை அவர் மீண்டும் செய்யக்கூடாது?

இது விதி சார்ந்த ஒரு விஷயம். பேட்ஸ்மேன் தனக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக ஒரு அடி முன்னே செல்கிறார். அதன் மூலம் இரண்டு ரன்களை வேகமாக ஓட முயற்சி செய்கிறார். இங்கே அவர் அவுட் ஆனாரா? இல்லையா? என்பது விஷயம் இல்லை. கேப்டன் அந்த முறையீட்டை திரும்பப் பெற்றாரா? இல்லையா? என்பதுதான் விஷயம். இங்கே நாம் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி மட்டும் சில வினாடிகள் பேசுவோம்.

விதிப்படி இந்த முடிவு மூன்றாவது நடுவருக்குச் சென்றது. நடுவர் 'நாட் அவுட்' என்று சொன்னார். அப்படி என்றால் இது 'நாட் அவுட்' தான். இதில் அந்த முறையீட்டை திரும்பப் பெறுவதற்கான அவசியமே இல்லை. ஒருவேளை ஜிதேஷ் சர்மா 'அவுட்' என தீர்ப்பு வந்திருந்தால், பந்துவீச்சாளர் தான் பந்து வீசி முடிக்கும் முன்பாகவே அவர் தனது கால்களை எடுத்து வெளியே வைத்திருந்தால் இது 'அவுட்' என தீர்ப்பாக இருந்திருக்கும்.

அப்போதும் பந்துவீச்சாளர் பக்கமே நியாயம் இருந்திருக்கும். ஆனால் இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் அந்த அணியின் ரசிகர்கள் பார்வையில் மோசமான விஷயமாக இருந்திருக்கும். அவர்கள் ரதி மற்றும் ரிஷப் பண்ட்டை விரும்பி இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

Tags:    

Similar News