கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு மரண பயத்தை காட்டிய ஹர்ஷித் ராணா: 41 பந்தில் அரைசதம் விளாசினார்

Published On 2026-01-18 21:23 IST   |   Update On 2026-01-18 21:23:00 IST
  • 7 விக்கெட்டுக்கு களம் இறங்கி விராட் கோலியுடன் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
  • 4 பவுண்டரி, 4 சிக்சர் அடித்து அசத்தினார்.

இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ரெட்டி 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 27.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜடேஜா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் விராட் கோலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவின் வெற்றியும் கடினமானது. அடுத்து ஹர்ஷித் ராணா களம் இறங்கினார். ஹர்ஷித் ராணாவை வைத்து விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 40-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுது்து 91 பந்தில் சதம் அடித்தார் விராட் கோலி.

இது விராட் கோலியின் 85-வது சர்வதேச சதமாகும். ஒருநாள் போட்டியின் 54-வது சதமாகும். இந்தியா 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 138 ரன்கள் தேவை.

மறுமுனையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்ஷித் ராணா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேமிசன், கிளார்க் என யார் என்று பார்க்காமல் நியூசிலாந்து வேகபந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கு விரட்டினார். இதனால் இந்தியா இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. 44-வது ஓவரை பால்க்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவரின் முதல் அரைசதம் ஆகும். இதில் தலா 4 பவுண்டரி, 4 சிக்ஸ் அடங்கும். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 37 பந்தில் 61 ரன்கள் தேவைப்பட்டது.

Tags:    

Similar News